என்.எல்.பி என்றால் என்ன? ( what is NLP?)

என்.எல்.பி என்றால் என்ன?

NLP

NLP in Tamil

என் எல் பி என்பது நியூரோ லிங்விஸ்டிக் ப்ரொக்ரம் என்பதன் சுருக்கம்.

இந்த நீளமான பெயரை சொல்வதைவிட, சுருக்கமாக என்எல்பி என்று சொல்வது எளிமையாக இருப்பதால் அப்படி சொல்லிப் பழகிவிட்ட காரணத்தால், மக்கள் என்எல்பி என்றால்தான் உடனே புரிந்து கொள்கிறார்கள்.

இந்த பெயர் நீளமாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாலேயே மக்கள் மனதில் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.

ஊக்கப்பயிற்சி, உளவியல் சிகிச்சை என்று அனைத்து வழிகளையும் உள்ளடக்கி ஆழமான விரிவான வழிமுறை ஒன்றை உலகுக்கு வழங்கும் பேரார்வத்தில் இதன் நிறுவனர்கள் நீளமான பெயரை சூட்டிவிட்டார்கள்.

  • பெயர் நீளமாக இருந்தாலும் என்.எல்.பி-யை புரிந்து கொள்வது எளிது.
  • பயிற்சிகளை செய்வது சுவாரஸ்யமானது.
  • நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உங்களை பலப்படுத்தும்.
  • நீங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த  வழி காட்டும்.
  • விரும்பிய பலனை விரைவில் கிடைக்க வழி வகுக்கும்.
  • உங்களை நீங்களே இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கும்.
  • சிந்தனை,சொல்,செயலில் ஒரு திடம் ஏற்பட உதவும்.
  • ஆக்கபூர்வமான பார்வை, அணுகுமுறை கூடும்.
  • மனதில் மகிழ்ச்சி இயல்பாக குடியிருக்கும்.
  • பிறரோடு இணக்கமாக இருக்க வைக்கும்
  • நம் கடந்த கால கசப்புகளை கரைக்கும்

மொத்தத்தில் துணிவுடனும், தெளிவுடனும், நல்ல வண்ணம் மண்ணில் வாழ வழி சொல்லிக்கொடுக்கும்.

 

நியூரோ என்பது மனதையும், அதன் இயக்கத்தையும் குறிக்கிறது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், முகர்தல் என்ற ஐந்து புலன்களால் உலகை உணர்கிறோம். இந்த உணர்வுகளை சுமந்து செல்லும் நரம்புகளை கருத்தில் கொண்டு ‘நியூரோஎன்ற சொல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் உடலின் நரம்பு மண்டல இயக்கத்தைப் பற்றிய முழுமையான படிப்பு இல்லை.

இந்த உலகை புலனுணர்வால் அறிகிறோம்.புலனுணர்வுகள் மூளையைச் சென்றடைந்ததும் எண்ணங்களாக உருவெடுக்கின்றன. எண்ண உருவாக்கம் உடனடியாக உடல், உணர்ச்சிகள், நடத்தை ஆகியவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதனால்தான் மனத்தின் இயக்கத்தை குறிக்கும் விதமாக நியூரோ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

 

லிங்விஸ்டிக் என்பது, நமது அனுபவத்தை எப்படி மொழியில் வடிக்கிறோம், பிறரோடு பறிமாறிக்கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

மேலும் நமது சொற்பிரயோகம் எந்தளவு நம் அனுபவத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் என்.எல்.பி கவனிக்கிறது.

அனுபவம்      =      மொழிதல்

சொல்வன திருந்தச் சொன்னால் அனுபவத்தின் தரமும் கூடுகிறது என்று என்.எல்.பி சொல்கிறது.

 

ப்ரொக்ரமிங்என்பது அனுபவத்தை மொழிப்படுத்தி, நடத்தை மூலம் வெளிப்படுத்தும் முறையைக் குறிக்கிறது. நாம் புரிந்துகொள்ளும் விதம், முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முறை ஆகியவற்றுக்கு நாம் கடைபிடிக்கும் வழிமுறைக்கு ’ப்ரொக்ரமிங்எனலாம்.

ப்ரொக்ரமிங் என்ற சொல் மென்பொருள் துறையிலிருந்து பெறப்பட்டுள்ளது

மூளை திடப்பொருள் என்றால், என்.எல்.பி மென்பொருள் ஆகும்.

 

சுருக்கமாக சொன்னால்,

நியூரோ       என்பது      சிந்தனை;

லிங்விஸ்டிக்  என்பது      சொல்

ப்ரொக்ரமிங்  என்பது       செயல்.

எனவே தினசரி மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதன் தொகுப்பே என்.எல்.பி எனலாம். எந்த ஒரு செயலையும் திறம்பட செய்வதற்கான வழிகளை என்.எல்.பி. தந்து உதவுகிறது சிந்தனை, சொல் செயல் ஆகியவற்றை முறைப்படுத்தி வைக்க என்.எல்.பி. உதவுகிறது. ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு வழி வகுக்கிறது. நினைத்ததை அடைய கூடுதல் திறன் தருகிறது.

அதனால் நடைமுறை வாழ்க்கையின் நடத்தைகளில்தான் என்.எல்.பி-யின் வேர்கள் பின்னியிருக்கின்றன. வெறும் ஆராய்ச்சிக் கட்டுரைபோல் அரங்குகளில் பகிர்ந்து கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லை.

எப்படி ஒருவர் சிறப்பாக உலகை உணர முடியும், எப்படி அனுபவத்தை மொழியால் விளக்கமுடியும், சைகையால் உணர்த்த முடியும், எப்படி தனது நடத்தையை, செயல்களை, செப்பனிட முடியும் என்பதற்கு என்.எல்.பி பெரிதும் உதவுகிறது.

எனவே என்.எல்.பி என்றால் என்ன ?

நடைமுறை வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் ஒரு வழிமுறை என்.எல்.பி எனலாம்.

வெளி உலகிலிருந்து தகவல்கள் புலன்கள் மூலம் உள்ளே நுழைந்து மூளையை சென்றடைகின்றன. அங்கு அவைகள் அறியப்பட்டு, சொல்லுக்கு  செயலுக்கு வித்திடப்படுகின்றன. புலன்களால் அறியப்பட்டு மொழியப்படுவதால் என்.எல்.பி-யை ஐம்புலஅறிவு என்றும் சொல்லலாம்.

அல்லது புலன்மொழித்திட்டம் என்று மொழிபெயர்க்கலாம்

 

என்.எல்.பி வறையறை(DEFINITION)

விஞ்ஞானமும் கலையும் ஒருங்கிணைந்த களஞ்சியத்தை ஒரு கோப்பைக்குள் அடைத்துவிட முடியாதுதான்.

என்றாலும் பல்வேறு நபர்கள் என்.எல்.பி-யை பல்வேறு கோணங்களில் புரிந்து கொண்டுள்ளனர்.பலப்பல பலன்களும் பெற்றுள்ளனர். அதனால் வறையறை என்பதும் பல வகைப்பட்டது.

என்.எல்.பி என்பது—

v  மேன்மை தரும் கலையும் விஞ்ஞானமும்

v  மனத்துக்கான சுய வழிகாட்டி

v  மூளையின் மென்பொருள்

v  மாறாத சிறப்புடன் தொடர்ந்து செயல்படச் செய்யும் சக்தி

v  ஆக்க சக்திகளை முறையான வழிகளில் பயன்படுத்துவதற்கான கையேடு

v  உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்படையான ஆய்வு

v  மனித இனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட மனப்பான்மையுடன் தொடர்யுக்திகளை தரும் வழிமுறை (ரிச்சார்ட் பாண்ட்லர்)

v   உலக நடைமுறையைக் கண்டறிந்து, பயன்படுத்துவதற்கு விரைவான வழிமுறைகளைக் கற்றுத் தருவது என்.எல்.பி (ஜான் கிரெண்டர்)

v  பலனளிக்கும் அனைத்துமே என்.எல்.பி ( ராபர்ட் டில்ட்)

 

ஆழ்மனஅற்புதத்தைஅள்ளித்தரும்அக்ஷயபாத்திரம்என்.எல்.பி  என்பது நான் தரும் விளக்கம்.